நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தப் பின் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
* அனைத்து உயர்நிலை.. மேல் நிலை பள்ளிகளுக்கு இலவச இணைய வசதி
* பொம்மை தயாரிப்புகளின் மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை
* புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
* கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும்.
* மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க மையம்
* அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் 2028க்குள் முழுமையடையும்.
* புதிதாக தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு
*உதான் 2.0 திட்டத்தின் மூலம் 120 புதிய விமான நிலையம் உருவாக்கப்படும்
* உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
* 2040 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு.
* பீகாரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும்
* ஹோம் ஸ்டே எனப்படும் தங்கும் வசதி செய்து கொடுப்பவர்களுக்கு முத்ரா கடன் வசதி
* தனியார் பங்களிப்புடன் மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் 50 சுற்றுலா தளங்களை மேம்படுத்த நடவடிக்கை