2025–26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இது பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தின் இரண்டாவது பட்ஜெட் ஆகும். மோடி அரசாங்கம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும் முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த பட்ஜெட்டிலும் விவசாயத் துறைக்கு பயனளிக்கும் நோக்கில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன இருக்கும்?
கிசான் கிரெடிட் கார்டு வரம்பை அதிகரித்தல்
கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான (KCC) வரம்பை அரசாங்கம் தற்போதைய ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தலாம். இந்த நடவடிக்கை விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கைகளில் அதிக முதலீடு செய்ய உதவுவதன் மூலம் அவர்களின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும்.
வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தலாம் :
தற்போது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்த கிரெடிட் கார்டுகளின் வரம்பு ரூ.3 லட்சம். இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிசான் கிரெடிட் கார்டின் வரம்பு நீண்ட காலமாக அதிகரிக்கப்படவில்லை என்ப்தால், அதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த பட்ஜெட் மூலம், கிரெடிட் கார்டு வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
4% இல் கடன் :
கிசான் கிரெடிட் கார்டில் விவசாயிகள் அரசாங்கத்திடமிருந்து 9 சதவீதத்தில் கடன் பெறுகிறார்கள். ஆனால் அரசாங்கம் விவசாயிகளுக்கு 2 சதவீத மானியத்தை வழங்குகிறது. ஆனால் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், 3 சதவீத வட்டி விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது விவசாயிகள் இந்த கடனை 4 சதவீத வட்டியில் மட்டுமே பெறுகிறார்கள்.
விவசாயிகளுக்கான கிரெடிட் கார்டு திட்டம் 1998 இல் தொடங்கப்பட்டது. இந்த அரசாங்கத் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிசான் கிரெடிட் கார்டு வரம்பு உயர்வு தவிர விவசாயிகளுக்கு வேறு சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய உள்ளீடுகள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு
விவசாயிகளை ஆதரிக்கும் முயற்சியில், விதைகள் மற்றும் உரங்கள் போன்ற விவசாய உள்ளீடுகள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உள்ளீடுகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பது செலவுகளைக் குறைக்கவும் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கவும் உதவும்.
விவசாயத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு
முந்தைய பட்ஜெட்டில், விவசாயம் தொடர்பான திட்டங்களுக்கு ரூ.65,529 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, விவசாயத் துறையை மேம்படுத்துவதிலும் விவசாயிகளை ஆதரிப்பதிலும் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதை பிரதிபலிக்கும் வகையில், ஒதுக்கீட்டை 5–7% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் நலனில் கவனம்
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும் விவசாயப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பிரதமர் மோடி அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. வரவிருக்கும் பட்ஜெட் விவசாய சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுடன் இந்த முயற்சிகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமனின் 8-வது பட்ஜெட்
இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 8-வது மத்திய பட்ஜெட்டாகும். ஜூன் 2024 இல் அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் இது 2-வது முழு பட்ஜெட்டாகும். தற்போதைய பதவிக் காலத்தின் முதல் முழு பட்ஜெட் ஜூலை 2024 இல் சமர்ப்பிக்கப்பட்டது.
Read More : நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்..