சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், சென்னையில் கட்டிட அனுமதிக்கான கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், 1000 சதுர அடிக்கு மேல் வீடு, கட்டிடங்கள் கட்டினால் 100% வரை கட்டணம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏழைகளை பாதிக்காத வகையில், 40 சதுர மீட்டருக்கு குறைவான இடத்தில் வீடு கட்டினால், 10 சதுர மீட்டருக்கு 90 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதே போல் 41 முதல் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டுவோருக்கு 10 சதுர மீட்டருக்கு ரூ.155 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் நலன் கருதி இந்த கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேநேரம், வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம், தொழிற்சாலைகளின் தளப்பரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு (1,076 அடி) மேல் கட்டிட பரப்பு இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100% அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில், குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொறுத்தவரை முதல் 40 சதுரமீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90, 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 1,050 என இருந்தது. இந்த தொகையானது, தற்போது ரூ.180, ரூ.310, ரூ.820, ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கும், அதே குறிப்பிட்ட சதுர மீட்டர் அளவில், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.210, ரூ.370, ரூ.920 மற்றும் ரூ.2,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றுக்கான கட்டணம், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான தீர்மானம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கட்டணம் வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.