தேவாலயங்களில் கொள்ளையடித்த பணத்தை வைத்து மனைவிக்கு பங்களா வீடும், கள்ளக்காதலிக்கு பண்ணை வீடும் கட்டியிருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே புதூரில் கடந்த ஜனவரி மாதம் புதிதாகக் கட்டப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்ட புனித லூசியாள் தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் காணிக்கை அன்னை தேவாலயத்தில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்ததுடன் மாதா சிலையில் அணிவித்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், தனிப்படை போலீசார், கொள்ளை நடந்த தேவாலயங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பர்தா அணிந்த பெண்ணும், ஹெல்மெட் அணிந்த ஆணும் தேவாலயத்துக்குள் சென்று உண்டியலை உடைத்து திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

மேலும், தேவாலய சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிசிடிவி-யில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, பகல் நேரத்தில் பைக்கில் ஹெல்மட் அணிந்த ஆணுடன், பர்தா அணிந்த பெண்ணும் ஜோடியாக தேவாலயங்களை நோட்டமிடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. கேமராவில் பதிவான பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் ஆய்வு செய்தபோது அது கருங்கல் அருகேயுள்ள கப்பியறைப் பகுதியை சேர்ந்த ஷாபுமோன் என்பவரின் பெயரில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. ஷாபுமோனை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர். அவர் தனது பைக்கில் பர்தா அணிந்த ஒரு பெண்ணுடன் குளச்சல் வெட்டுமடைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களை முறைப்படி விசாரித்தபோது பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஷாபுமோன் எம்.பி.ஏ படித்துவிட்டு, வேலை கிடைக்காததால் தேவாலய உண்டியல்களை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ஷாபுமோன் 5 ஆண்டுகளுக்கு முன்பே தேவாலயங்களில் கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவருக்கும் கணவனை இழந்த நூர்ஜகான் என்ற பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் சேர்ந்து பகலில் தேவாலயங்களை நோட்டமிடுவதும், இரவில் கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 வருடங்களில் குளச்சல், புதூர், திங்கள்சந்தை, தக்கலை, அழகியமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 17 தேவாலயங்களில் உண்டியலை உடைத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 200 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாகத் தெரியவந்திருக்கிறது. ஷாபுமோன், நூர்ஜகான் இருவரும் கைது செய்யப்படுள்ளனர். அவர்களிடமிருந்து 50 பவுன் நகைகள், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

ஷாபுமோன் காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை, கடந்த ஆண்டு திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு தனியாக பங்களா வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார். கொள்ளையடித்த பணத்தில் சொந்தமாக கோழிப்பண்ணை அமைத்திருக்கிறார். அங்கு ஒரு பண்ணை வீடுகட்டி, காதலியான நூர்ஜகானைத் தங்க வைத்திருக்கிறார். நூர்ஜகான் குறித்து மனைவி கேட்டால் அவர் கோழிப்பண்ணையில் வேலைக்கு இருக்கிறார் என ஷாபுமோன் சொல்லியிருக்கிறார். கொள்ளையடித்த பணத்தில் மனைவி, கள்ளக்காதலி நூர்ஜகானுடன் ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார். இப்போது ஷாபுமோனும், அவரின் காதலி நூர்ஜகானும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.