டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சமீப சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனி பொழிவாள பெரிது பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எவ்வளவு கவனமாக சென்றாலும் விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
டெல்லி, இமாச்சல், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் ஏற்கனவே கடும் பனிமூட்டம் காரணமாக சாலை போக்குவரத்துகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது உத்திரபிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை (அல்லது மூடுபனி தெளிவாகும் வரை) அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என உத்தரபிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் (UPSRTC) முடிவு செய்துள்ளது. மேலும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பேருந்து நிலையங்களில் மூடுபனி நிலவுவதை கண்காணிக்க மண்டல அல்லது உதவி மண்டல மேலாளர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, தனித்தனி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 39 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் தயாசங்கர் சிங் கூறுகையில் “அடர்த்தியான மூடுபனி மற்றும் அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக, உத்தரபிரதேச சாலை போக்குவரத்து கழகம் (UPSRTC) பேருந்துகளை இரவு நேரத்தில் இயக்குவதை அரசு நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியின் மண்டல மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” கூறினார். மேலும் இரண்டு நாட்களுக்கு அடர்த்தியான மூடுபனி நீடிக்கும் என லக்னோவில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.