‘கிரெடிட் கார்டு’ குறித்த விவரங்களை தெரியாமல் பலரும் அதனை வாங்கி கொள்கின்றனர். ஆனால், நான் அதனை பயன்படுத்துவது கூட இல்லை என பலரும் பெருமை பேசுகின்றனர். இப்படி கூறுவோர் ‘அலர்ட்’ ஆகி உடனே தங்களின் கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்புள்ளது.
கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தாமல் இருந்தால் என்ன சிக்கல் வரும் என நீங்கள் கேட்கிறீர்களா? அப்போது உங்களுக்கு தான் இந்த செய்தி. கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை அறிந்து அதனால் நமக்கு ஏற்படும் தேவையில்லாத நிதிச்சுமையில் இருந்து எளிமையாக தப்பித்து கொள்ளலாம். கிரெடிட் கார்டு.. வரமா? சாபமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், கிரெடிட் கார்டால் நன்மைகள் இருந்தாலும் கூடவே பிரச்சனைகளும் இருக்கின்றன. இதனால் கிரெடிட் கார்டை பயன்படுத்த விரும்புவோர் அதனை பற்றிய விவரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டு வழங்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன. இதனாலேயே பலரும் கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு கிரெடிட் கார்டு பெறுவோரில் பெரும்பாலானவர்கள் மாத கடைசியில் தங்களின் கையிருப்பு பணம் கரைந்த பிறகு பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்பிறகு கிரெடிட் கார்டுக்கான தொகையை அவர்கள் செலுத்தி வருகின்றனர். இந்த கிரெடிட் கார்டு பில்லை உரிய காலத்தில் செலுத்த தவறினால், வட்டி உருவாகும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் அதற்கான பில்லை சரியாக கட்டி விட வேண்டும். இது ஒருதரப்பு மக்கள் என்றால் இன்னொரு தரப்பினர் வேறு விதமாக உள்ளனர். அதாவது இந்த வகை மக்களுக்கு கிரெடிட் கார்டு வாங்க விருப்பம் இருக்காது. ஆனால், வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் தொடர் நச்சரிப்பு உள்ளிட்டவற்றாலும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் என்ன செய்வது? என சிலர் கிரெடிட் கார்டை வாங்கியிருப்பார்கள்.
இவர்கள் அந்த கார்டை பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். இவ்வாறு கிரெடிட் கார்டை வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருப்போர் என்னிடமும் கிரெடிட் கார்டு உள்ளது. ஆனால், நான் ஒருநாள் கூட பயன்படுத்தியது இல்லை என சிரித்தபடி பெருமையாக பேசுவது உண்டு. இப்படிப்பட்டவர்களும் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. அதாவது நீண்டகாலமாக கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட ஆண்டுதோறும் ஏஎம்சி என்ற பெயரில் கிரெடிட் கார்டுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாம் கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருக்கும்போது இந்த கட்டணம் பற்றி நாம் கவலை கொள்வது இல்லை. இதனால் பலரும் அந்த கட்டணத்தை செலுத்துவது இல்லை. இதனால் கிரெடிட் கார்டுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணத்துக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு நாள் திடீரென நாம் பார்த்தால் அது மிகப்பெரிய தொகையில் நிற்கும். அதோடு இந்த பிரச்சனை என்பது கிரெடிட் கார்டு சிபில் ஸ்கோரையும் பாதிக்கும்.
இதனால் கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தாமல் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனங்களை தொடர்பு கொண்டு அதன் செயல்பாட்டை நிறுத்தி விடுங்கள். மேலும், என்ஓசி எனும் தடையில்லா சான்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வங்கி, நிதி நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து போன் செய்து கிரெடிட் கார்டு ஆஃபர் செய்கிறோம் என கூறினால் அதுபற்றிய விவரங்களை நன்கு கேட்டறிந்த பிறகு தேவை என்றால் மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் கிரெடிட் கார்டு தேவையில்லை என்றே நேரடியாக கூறிவிடுங்கள். மாறாக கிரெடிட் கார்டு வாங்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது பணம் தான் வீணாக செலவழியும் என்பது குறிப்பிடத்தக்கது.