தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியான சி.எம்.சி.-யில் அரை நிர்வாணமாக மாணவர்கள் ராகிங் செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில் படிக்கும் மூத்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் ராகிங் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் மாணவர்கள் அரை நிர்வாணத்தில்நடப்பதும், ஓடுவதும் ஒரு சில மாணவர்கள் மீது எதோ பொருட்களை கொண்டு வீசுவதும், தீ விபத்தின் போது பயன்படுத்தப்படும் தண்ணீர் பாய்ச்சிகளை மாணவர்கள் மீது பீய்ச்சியடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. மாணவர் ஒருவரை தண்ணீர் சகதியில் நீச்சலடிக்க வைத்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.
மூத்த மாணவர்கள் 7 பேர் இதில் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணத்தில் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 7 மாணவர்கள் இதில் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் கூறுகையில், ’’ மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி கமிட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு கடிதம் கிடைத்தது. மாணவர்கள் தங்கும் விடுதியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்துள்ளனர். என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம். மாணவர்கள் இது போன்று நடந்து கொள்வது வேதனையான விஷயம்’’ என கூறினார்.
இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்துள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடுதி வார்டன் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு போதும் நிர்வாகம் இது போன்ற செயல்களை சகித்துக் கொண்டு இருக்காது. மாணவர்கள் யார், யார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நிர்வாகம் முறையிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.