“அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம் என்றும், பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றும் அமித்ஷா அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவிக்கும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்துள்ளார். சென்னை வந்த அவரை பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை தமிழ்நாட்டில் கட்சி நிலவரம் குறித்து மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். பின்னர், மயிலாப்பூரில் உள்ள ‘துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டிற்கு சென்று அவருடன் சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணியை அமைப்பது, பாஜகவின் தேர்தல் வியூகம், அதிமுக கூட்டணி போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின்போது, அதிமுகவில் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, கட்சியை வலுப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என குருமூர்த்தி அமித்ஷாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுகவின் ஊழல்கள், மோசடிகள், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், குருமூர்த்தியின் வீட்டிலிருந்தபடியே எடப்பாடி பழனிசாமிக்கு ஃபோன் செய்து அமித்ஷா பேசியுள்ளார்.
இதையடுத்து, கிண்டி நட்சத்திர ஓட்டலில் அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ”பாஜக, அதிமுக தலைவர்கள் இணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.