பிறந்த குழந்தைக்கு கண் மற்றும் புருவங்களில் மை வைப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகளும் விளைவுகளும் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்பெல்லாம் பிறந்த குழந்தையை ஒரு புகைப்படம் கூட எடுக்க மாட்டார்கள். கண்திருஷ்டி பட்டுவிடும். இதனால் உடல்நலம் கூட பாதிக்கப்படலாம் என்று. இதனை எல்லாம் இந்த தலைமுறையினர் பின்பற்றுவதில்லை.பிரசவ அறையில் குழந்தை பிறப்பது முதல், வீட்டிற்கு மலர்தூவி வரவேற்பது வரை அனைத்தையும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். ஆனாலும், சில பேர் வழக்கத்திற்கு மாறான, குழந்தையை பாதிக்கக் கூடிய சில விஷயங்களை பின்பற்றிதான் வருகின்றனர். அதில் மிக முக்கியமான ஒன்று கருப்பு நிற மை வைப்பது. நிறைய பெற்றோர் குழந்தைக்கு சிறிதாக பொட்டு வைப்பதற்கு பதில், அலங்காரம் என்ற பெயரில் குழந்தையின் புருவம், கண்களில் அதிகளவில் மையை எடுத்து பூசிவிடுகின்றனர். இது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. எனவே, அவர்களின் சருமத்துக்கு குளியல் பொடி, மஞ்சள் பொடி, பவுடர் போன்றவற்றை உபயோகிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவற்றை உபயோகிப்பதால் குழந்தையின் சருமம் வறண்டு, சிவந்துபோகும். அதே நேரத்தில் அரிப்பு, எரிச்சல் அலர்ஜி ஆகியவற்றுக்கு குழந்தை உள்ளாகும். மேலும் புண்களும் நோய்த்தொற்றும் வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளைக் குளிக்க வைக்க சோப் உபயோகிப்பதற்குப் பதில், சோப்பைப் போலவே இருக்கும் Syndet bar-யை உபயோகிக்கலாம். இது குழந்தையின் சருமத்தை சுத்தமாகவும் வறண்டுபோகாமலும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
மேலும் குழந்தையை தலைக்குக் குளிப்பாட்டுவதாக இருந்தால் அவர்களின் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாத, குழந்தைகளுக்கான பிரத்யேகமான, தரமான ஷாம்பை உபயோகிக்கலாம். மற்றபடி சோப்பு, அரப்புத்தூள், சீயக்காய்த்தூள் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தக்கூடாது.
குழந்தைகளுக்க ஏன் மை வைக்கக் கூடாது? குழந்தைகளுக்கு கண்களிலும் புருவங்களிலும் மை தீட்டக் கூடாது. பெரும்பான்மையான கண் மைகளில் காரீயம் கலந்திருக்கும். அதை உபயோகிப்பதால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தவிர, கண் மை உபயோகிப்பதால் குழந்தையின் கண்களில் எரிச்சல், சிவந்து போவது, கண்ணீர் வருவது, ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, கண் மையைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் வீட்டில் உள்ள மூத்தவர்கள் கட்டாயப்படுத்தினால் குழந்தையின் உள்ளங்கால் பகுதியில் சிறிதாக மை வைக்கலாம். பெரும்பாலும் இவற்றை தவிர்ப்பதே சிறந்தது.