தமிழ்நாட்டில் பெண்களுக்கான ரூ.1000 உரிமைத்தொகை வழங்க, இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், எந்த முறையில் பணம் வழங்கப்படும் என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.
பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார். மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்றும், தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. ஆனால், தமிழ்நாட்டில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது. அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 கிடைக்குமா? என்ற சந்தேகத்தினை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
இதற்கு, தமிழக சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதா ஜீவன் அப்போதே ஒரு விளக்கம் அளித்திருந்தார். அதில், “ஏற்கெனவே, மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்றுவரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதில் மறுபடியும் பயனடைய மாட்டார்கள். வருமான வரி செலுத்தும் பெண்களும் பயனடைய மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. ஆனால், கண்டிப்பாக ஏழை, எளிய, நடுத்தர குடும்பப் பெண்கள் நிச்சயமாக ரூ.1000 உரிமைத் தொகையைப் பெறுவார்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு நடுவில், இந்த 1000 ரூபாய் யார் யாருக்கு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என்கிறார்கள்.. ரூ. 1000 உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற்றுவரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற முடியாது என்றார்கள். பிறகு, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோ அரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்றார்கள்..
இப்படி பல்வேறு தகவல்கள் வட்டமடித்து வரும் நிலையில், இதுவரை அரசிடமிருந்து இத்திட்டம் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதே உண்மை. யார் யாருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்பது போலவே, எதன் மூலமாக இந்த உரிமைத்தொகை அரசு தரப்போகிறது? என்ற அடுத்த சந்தேகமும் கிளம்பி உள்ளது. பெரும்பாலானவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குகின்றனர்… அந்த கடனை தவணை வாரியாகவும் செலுத்தி வருகிறார்கள்.. உரிமை தொகையை, அந்த வங்கி கணக்கில் செலுத்தினால், கடனுக்கான தவணையாக பிடித்தம் செய்து விடுவார்கள்.. பல வங்கிகள், குறைந்தபட்ச இருப்பை (மினிமம் பேலன்ஸ்) கட்டாயமாக்கி இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது இந்த உரிமைத்தொகையை, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தினால், அரசின் திட்டம் மக்களை சென்றடையாது.. பிரபலமும் அடையாது.. இதுவே பெண்களின் கைகளில், அந்த உரிமைத்தொகையை கொடுத்தால், திமுகவுக்கு ஆதரவாக மாறுவார்கள் என்று திமுக தரப்பு நம்புவதாக தெரிகிறது. அதனால்தான், மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம்.. அதன்படி, கூட்டுறவு வங்கி கணக்கில் மட்டும் உரிமைத்தொகை செலுத்தப்படும். அதன் ஊழியர்கள், “மைக்ரோ ஏடிஎம் “எனப்படும் கையடக்க கருவி மற்றும் பண பெட்டகத்துடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு மாதம்தோறும் செல்வார்கள்.
அந்த கருவியில் பயனாளிகளின், ஆதார் கார்டு நம்பர் உள்ளிட்ட விவரங்கள், ஏற்கனவே பதிவாகி இருக்கும். அவர்கள் விரல் ரேகை பதிவு செய்து அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி உரிமைத்தொகை பணத்தை பெறலாம். இதை செயல்படுத்துவது தொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார்களாம். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இப்போது இன்னொரு சந்தேகம் கிளம்பி உள்ளது.. ரூ.1000 உரிமைத்தொகையை ரேஷன் கார்டு மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படுமா? என்பதே அந்த சந்தேகம்..
இந்த உரிமை தொகை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டால் EMI உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிகளில் இருந்து அந்த பணம் நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். அதேசமயம், ரேஷன் கார்டு வழியாக ரேஷன் கடையிலேயே பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டால், அதிலும் கூட பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. அதனால், உதவித்தொகை வழங்குவது குறித்து, தமிழ்நாடு அரசு ஆலோசித்து கூடிய விரைவில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.