Pamban Bridge: மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக கட்டப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். பாம்பனில் நூற்றாண்டு பழமையான தூக்குப் பாலத்திற்குப் பதிலாக இந்த புதிய பாலம் நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன? புதிய பாம்பன் பாலம் 1964 -ல் ஏற்பட்ட புயலை விட வலுவான புயல்களை தாங்குமா?. என்பது உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
அதாவது, புதிய பாம்பன் பாலம், 1964 ஆம் ஆண்டு பழைய பாலத்தை கணிசமாக சேதப்படுத்திய புயல்களை விட அதிக தீவிரம் கொண்ட புயல்களைத் தாங்கும் என்று ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) இயக்குனர் எம்.பி. சிங் தெரிவித்தார். இந்தப் பாலம் மணிக்கு 230 கிமீ வேகத்தில் வீசும் காற்றையும், கணிசமான நில அதிர்வு சுமையையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1964-ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயல் பழைய பாம்பன் பாலத்தை மிகுந்தளவில் சேதப்படுத்தியது. இதை முன்வைத்து, தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய பாலம் மேலும் பலமான பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
“1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி மணிக்கு சுமார் 160 கிமீ வேகத்தில் வீசியது, இதனால் பழைய பாலத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டது. இருப்பினும், கப்பல் இயக்கத்திற்காக திறக்கப்பட்ட ஷெர்சர் ஸ்பான், சூறாவளியில் இருந்து தப்பித்தது மற்றும் சேதமடையவில்லை,” என்றும் “மேலும் அதிக தீவிரம் கொண்ட சூறாவளிகள் பாலத்திற்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது என்பதை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுத்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வகையில் இந்தியாவில் முதன்முறையாக கட்டப்பட்ட செங்குத்து தூக்கும் ஸ்பானர் பாலமாகும் இதன் திட்டமிடல், வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் செயல்படுத்தல் போன்ற அனைத்து பணிகளையும் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் (RVNL) மேற்கொண்டது. “இத்தகைய பாலம் ஒன்றை வடிவமைக்கும் பொழுது, அது எங்களுக்கான முக்கியமான சவால்களிலொன்று ஆக இருந்தது,” என்று சிங் கூறினார்.
லிஃப்ட் ஸ்பேனர் எப்போதும் அமர்ந்த நிலையில் இருக்க வேண்டும்: இதற்கு கூடுதலாக, பல பாதுகாப்பு நெறிமுறைகளும் உள்ளன. உதாரணத்திற்கு, இந்த தூக்கும் ஸ்பானர் (lift spanner) எப்போதும் கீழே அமர்ந்த நிலைக்குத் தான் இருக்கும்; கப்பல்கள் கடந்து செல்லும் நேரத்தில் மட்டுமே இது உயர்த்தப்படும். கடலின் மேல் நீர்மட்டத்திலிருந்து 4.8 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் தூண்களில் கிரிடர்கள் (girders) பதிக்கப்பட்டுள்ளன. எனவே, அதிக அலை ஏற்பட்டாலும், நீர்மட்டம் கிரிடரை எட்டும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
“பழைய பாலத்தின் கிரிடர் கடலின் நீர்மட்டத்திலிருந்து சுமார் 2.1 மீட்டர் உயரத்தில் இருந்தது. அதனால் அதிக அலை நேரங்களில், கடல்நீர் கிரிடர்களை மட்டுமல்லாது சில நேரங்களில் ரெயில் தண்டவாளத்திலும் தெறித்தது,” என்றும் சிங் கூறினார்.
1964 சூறாவளி புயல்: 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி ராமேஸ்வரத்தை தாக்கிய பிரம்மாண்டமான சுழற்சி புயல் அந்த பகுதிக்கு மட்டுமல்லாமல் ரெயில்வே கட்டமைப்புக்கும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்தப் பேரழிவை பற்றிய விவரங்களை பகிர்ந்த இரயில்வே அமைச்சகம் தெரிவித்ததாவது, 1964ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு பாம்பனிலிருந்து புறப்பட்ட பாம்பன்–தனுஷ்கோடி பயணியர் இரயில் ஆறு பெட்டிகளுடன், 110 பயணிகளை (இதில் ஒரு மாணவர் குழுவும், ஐந்து இரயில்வே பணியாளர்களும் அடங்கினர்) ஏற்றிக்கொண்டு சென்றது.
“பாலம் பரிசோதகர் அருணாசலம் குமாரசாமி, பாம்பனில் இருந்து அந்த ரயிலின் முன்னணி இயக்குநராக செயல்பட்டார். தனுஷ்கோடியின் வெளிப்புற சிக்னல் வேலை செய்யாமல் போனது, இதனால் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், ஓட்டுனர் ஒரு பெரிய ஆபத்தை ஏற்று, நீண்ட விசில் கொடுத்தார்,” என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்தச் சமயத்தில்தான் சுழலும் கடலிலிருந்து ஒரு பெரிய 20 அடி உயரமான அலை எழுந்து, அந்த ரயில்மீது மோதியது. “ஆரம்பக் கட்ட அறிக்கைகள் பாம்பனில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 115 எனக் கூறினாலும், அந்த இரவில் பலர் டிக்கெட் இன்றி பயணம் செய்ததாக கூறப்பட்டதால், மரண எண்ணிக்கை சுமார் 200 இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது,” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேரழிவு குறித்து தெளிவான தகவல் 1964 டிசம்பர் 25ஆம் தேதி தான் வெளிச்சத்திற்கு வந்தது, அப்போது மண்டபத்திலிருந்த கடல்சார் மேற்பார்வையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெற்கு ரயில்வே ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இரயில்வே அமைச்சகம் தெரிவித்ததாவது, ரயிலின் மரக்கட்டுமான பெட்டிகளின் பெரிய துண்டுகள் இலங்கை கடற்கரைக்கு கரைமோதியதாகவும் தகவல்கள் வந்தன. அந்த ரயில் விபத்துக்குப் பிறகு, அந்தத் தீவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 500-ஐ மீறியது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. பாம்பன் வயடக்ட் (viaduct) கடலில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் சில PSC கிரிடர்கள், தூக்கும் ஸ்பான் மற்றும் தூண்கள் (piers) மட்டும் தான் மீதமிருந்தன,” என அமைச்சகம் மேலும் தெரிவித்தது.