சென்னையில் அனுமதியின்றி தமிழிசை சௌந்தரராஜன் கையெழுத்து இயக்கம் நடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னதாக, மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி உதவித் தொகை வழங்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார். அந்த வகையில், இன்று சென்னையில் அனுமதியின்றி தமிழிசை சௌந்தரராஜன் கையெழுத்து இயக்கம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தடையை மீறி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் அவர் கையெழுத்து பெற முயன்றதாக கூறி போலீசார் தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்தனர். மேலும், அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்தினால் அதை தடுப்பதா..? என கேள்வி எழுப்பியதால், தமிழிசையை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதனால், பாஜகவினருக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.