2024 மற்றும் 2026 தேர்தலை சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா? என அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த தனது பேச்சிலிருந்து பின் வாங்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அவர் பின்வாங்காமல் இருப்பதே நல்லது. அப்போதுதான் ஒரு மாற்றம் வரும். சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்றால் தமிழக அரசின் சின்னத்தை மாற்ற வேண்டும்.
சனாதன தர்மம் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோவிலில் வந்து 30 பிரசுரங்களை படித்துள்ளார். இதும் சனாதான தர்மம் தான். சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள் தான் என்று 1949 முதல் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களை அரவணைத்து செல்வதுதான் சனாதன தர்மம்.
உதயநிதி கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தால் முதல் கண்டன குரலாக எனது குரல்தான் இருக்கும். ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவிற்கு ஓட்டு போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிராமணருக்கு ஓட்டு போட்ட இவர்கள் எப்படி சானாதனம் குறித்து பேச முடியும். உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன். 2024 மற்றும் 2026 தேர்தலில் சனாதன தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா? திமுக சனாதனத்தை ஒழிப்போம் என தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதானத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும். மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.