வட அமெரிக்க நாடான கனடா நாட்டில் செயல்பட்டு வரும் பாலியல் குழுக்களிடம் தங்களின் குழந்தைகள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கனடாவைச் சார்ந்த சமூக ஆர்வலர் மிச்செல் பியூர்கியூலே. கனடா நாட்டைச் சார்ந்தவரான இந்த சமூக ஆர்வலர் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கொடுமையான அனுபவங்களை பகிர்ந்து இது போன்ற அனுபவங்கள் உங்களது பிள்ளைகளுக்கும் நிகழாமல் இருக்க அவர்களை கண்காணித்து வாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படியான பாலியல் குழுக்களில் சிக்கி தங்கள் வாழ்வை இழந்தவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான ஆதரவையும் அளித்து வருகிறார் இவர். மிச்செல் பியூர்கியூலே தனது இரண்டு அனுபவங்களை பற்றி குறிப்பிடும்போது சமூக ஊடகங்களின் வாயிலாக சில நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டு அதன் பிறகு அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டு அவர்களுடன் நன்றாக பழகி வந்தேன். ஆரம்பத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள் நன்றாகத்தான் இருந்தது ஒரு இரண்டு மாதங்கள் கழித்து தான் அவர்கள் தங்களது சுய ரூபத்தை காட்டினார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் பகிர்ந்திருக்கிறார். அதன்படி தங்களின் குழந்தைகள் வீட்டில் அவர்களை தனிமைப்படுத்தி கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். மேலும் அவர்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? என்றும் கவனிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர்கள் உங்களுக்கு தெரியாமல் ஏதேனும் செல்போன்களை பயன்படுத்துகிறார்களா? என்று கவனிக்க வேண்டும். மேலும் தங்களது தோற்றங்கள் பற்றிய விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்களா? என்று கவனிக்க வேண்டும். அது தொடர்பாக அதிகமான செலவு செய்கிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும் என கூறி இருக்கிறார். அவர்கள் புதுப்புது ஆடை அலங்காரங்களை பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றை வாங்குவதற்கான பணம் அவர்களுக்கு எவ்வாறு வருகிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் அவர்கள் அந்த குழுக்களின் பிடியில் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பதை தெரிந்து செயல்படுங்கள் என கூறியிருக்கிறார் மிச்செல் பியூர்கியூலே.