கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தற்போதைக்கு எந்த கருத்தும் கூற முடியாது என்றும் அந்த சம்பவம் தொடர்பாக மனுக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் கடந்த ஏப்ரல் 1997இல் தொடங்கப்பட்டது. அதன் வெள்ளி விழா ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறுகிறது. முதலமைச்சர், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அருண் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். கலைவாணர் அரங்கத்தில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றனர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மக்களிடம் மனித உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆணையத்தின் கடமை. அந்த வகையில் வெள்ளி விழா மலர் வெளியிடப்படும். ஊடகத்துறையினர் மனித உரிமை குறித்த தெளிவான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மனித உரிமை உலகலாவிய அளவில் இன்று தேவை. மனித உரிமை தொடர்பாக சிறப்பாக பணியாற்றிய 3 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்கானிப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தன்னிச்சையான நடவடிக்கை எடுக்கவில்லை. மனுக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மனித உரிமை ஆணையத்திற்கு ஆண்டுக்கு 15,000 மனுக்கள் வந்துள்ளது. நியாமான கோரிக்கைககளாக இருப்பதை உடனடி விசாரணை மேற்கொண்டு தீர்வு காண்கிறோம். பள்ளி மாணவர்களுக்கு மனித உரிமையை பாடமாக சேர்க்க அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். NCC, NSS மனித உரிமை ஆணையத்திற்கு என்ற கிளப்கள் தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறோம். கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தற்போதைக்கு எந்த கருத்தும் கூற முடியாது. அந்த சம்பவம் தொடர்பாக மனுக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.