நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிப்.27ஆம் தேதி சீமான் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அது தற்போது தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ”இந்த வழக்கை ஆராய்ந்த போது விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சனை, சினிமா துறையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி அணுகியுள்ளார். அப்போது, அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளார். சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்த நிலையில், அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்திருக்கிறார்.
அரசியல் அழுத்தம் காரணமாகவே சீமான் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மிரட்டல் காரணமாக விஜயலட்சுமி தனது புகாரை திரும்பப் பெற்றது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அந்த புகாரை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள் அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது. எனவே, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது. இதனால், சீமான் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். முதற்கட்டமாக வரும் 27ஆம் தேதி சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.