போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், தமிழக பேருந்துகளை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படும். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கள் அறிவித்திருக்கின்றன.
இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து சீரான பேருந்து இயக்கம் நடைபெற வேண்டும். சேம மற்றும் தினக்கூலி பணியாளரக்ள் கட்டாயமாக பணிக்க வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் இயங்காது என்பதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது கடினம் என கூறப்படுகிறது.