பள்ளிக்கு செல்லாமல் மற்றும் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் அனைவருக்கும் ஒரே தீர்வு தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் ஆகும். இதன் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
திறந்தநிலை கல்வி முறையில் பள்ளிக்கே செல்லாதவர் கூட படிக்க முடியும். இந்த திறந்த நிலை கல்வி முறையை நாடு முழுவதும் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும், தமிழகத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் வழங்குகிறது. பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டவர்கள், மீண்டும் படிக்க வேண்டும் என நினைத்தால், இந்த தொலைதூர கல்வி முறை நல்ல வழி. புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களும், தான் செய்யும் தொழில் சார்ந்த முறையான படிப்பை படிக்க வேண்டும் என நினைப்பவர்களும் கூட இந்த கல்வி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு 6,7 வயதிலேயே டென்னிஸ், இசை, கோடிங், சாஃப்ட்வேர், கிராஃபிக்ஸ், வீடியோ மேக்கிங் என ஒவ்வொரு துறையிலும் தங்களது தனித்திறமைகளை வளர்த்துகொள்ள அதிகளவில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களுக்கு மட்டுமல்ல, அரசுப் பணிக்குச் செல்வதற்கான போட்டித் தேர்வுகளில்தான் முழு கவனமும் செலுத்த வேண்டும் என நினைக்கும் பலருக்கும் இது கைகொடுக்கிறது. இந்த முறையில் என்ன படிக்கலாம், எப்போது படிக்கலாம், என்பதை அவரவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் எந்த முறையிலும் படிக்கலாம். பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
இதுமட்டுமல்லாமல், இந்த தேசிய திறந்த நிலை கலவி முறை சிபிஎஸ்இ-க்கு இணையானது. இதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்: இறுதித்தேர்வு ஆண்டிற்கு இருமுறை நடைபெறும். தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தால் அது 5 ஆண்டுகள் வரை செல்லும். தேர்வில் தோல்வி அடைந்தால் 9 முறை மறுத்தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்கும். தேசிய திறந்தநிலையில் கல்வியில் படித்து பெறுகின்ற சான்றிதழ் இந்தியாவில் இயங்கிவரும் மற்ற அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பெறும் சான்றிதழ்களுக்கு இணையானது. இதனை கொண்டு தொழிற்படிப்பு உள்ளிட்ட அனைத்து வகையான மேற்படிப்புகளும் படிக்கலாம். மேலும் ஐஐடி, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளையும் எழுத முடியும்.
பள்ளிக்கு செல்லாமலே எழுத, படிக்க தெரிந்த படிக்க ஆர்வமுள்ளவர்கள், 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சமர்பித்து அரசின் 8ம் வகுப்பு தேர்வினை எழுதலாம். தனித் தேர்வர்களாகவோ பள்ளிக்கு சென்று 8ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பள்ளி செல்ல முடியாதவர்கள் 15 வயது முடிந்த பின் நேரடியாக 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வையும் எழுதலாம். தேசிய திறந்தநிலை கல்வியில் படிக்கு எப்போதுவேண்டுமானாலும் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். அனைத்து நடைமுறைகளும் ஆன்லைனில் மட்டுமே .
தேசிய திறந்த நிலை பள்ளியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 17 மொழிகளும் அறிவியல் அல்லாத கணிதம், புவியியல், பொருளியல், வணிகவியல், வரலாறு உள்ளிட்ட 11 பாடங்களும் உள்ளன. மேல்நிலையில் 9 மொழிகளும், 33 பாடங்களும் உள்ளன. இசை, விளையாட்டு மற்றும் கலைச்சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபட்டு திறமையை வளர்த்துக்கொள்ளலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை nios.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், தேசிய திறந்த நிலை பள்ளியில் அனைத்து பிரிவுகளுக்கும் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 15,2023 ஆகும். மேலும் விவரங்களுக்கு : https://www.nios.ac.in-ல் தெரிந்துகொள்ளுங்கள்.