நவம்பர் 1ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களிழும் கன்னட கொடி ஏற்ற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. கர்நாடக மாநிலம் உதயமான தினம் ஆண்டு தோறும் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கர்நாடகாவில் செயல்படும் கல்வி மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் கட்டாயம் கன்னட கொடி பறக்க விட வேண்டும் என்று அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கன்னட மொழி தெரியாமல் கர்நாடகாவில் வாழ முடியாது என்பதை பிற மாநிலத்தவர்கள் உணர வேண்டும். சுதந்திர தினம், குடியரசு தினத்தைப் போல, நவ.1இல் கன்னட கொடியை ஏற்றி கலாசார நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும். கன்னட கொடியை ஏற்றாத வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், இதை காரணமாக வைத்து, வர்த்தக மற்றும் கல்வி நிறுவனங்களை மிரட்டும் கன்னட ஆதரவு அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
தற்போதைய கர்நாடகா மாநிலம், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மைசூரு மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1973 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி கர்நாடகா என மறுபெயரிடப்பட்டது. அன்றைய தினத்தை கர்நாடக மாநிலம் உதயமான நாளாக அம்மாநில அரசு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.