கடந்த சில மாதங்களாக ரயில்களில் அதிகரித்து வரும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல புதிய விதிமுறைகளை இந்திய ரயில்வே விதித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கையில், ”ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்யும் மக்கள் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை தான் தூங்க வேண்டும். மற்ற நேரங்களில் மற்றவர்களுடன் இருக்கையை பகிர்ந்து கொண்டு, உட்கார்ந்து கொண்டு பயணம் செய்ய வேண்டும். பயணிகள் ரயிலில் ஏறியவுடன் தூங்க விரும்புவதால் உறக்கத்திற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. நடுத்தர பெர்த்தில் உள்ள நபர்கள் படுக்கையில் இருந்து கொள்ள தகராறு செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதன் காரணமாகவே தூங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்தை இந்திய ரயில்வே விதித்துள்ளது.
அதேபோல் ரயிலில் சத்தமாக இசையைக் கேட்பதற்கும் தொலைபேசியில் பேசுவதற்கும் இந்த விதி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூங்கும் நேரத்தில் சத்தமாக தொலைபேசியில் பேசுவது, ஹெட்செட் இல்லாமல் இசை கேட்பது போன்ற பல புகார்கள் இந்திய ரயில்வேக்கு வந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் இவை அனைத்தும் இருப்பதால் இதுபோன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பயண டிக்கெட் பரிசோதகர்கள்), கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்கள் ரயில்களில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.