நீதிமன்ற உத்தரவு மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதாக 67 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் படி, இணைய விதிமுறை மீறல்களில் ஈடுபடும் தளங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து முடக்கி வருகிறது. அதன்படி, விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாட்ஸ் அப், யூடியூப் போன்ற கணக்குகளை மத்திய அரசு முடக்கி வருகிறது. இந்நிலையில், தற்போது 67 ஆபாச இணையதளங்களை முடக்கி மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனே நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 63 இணையதளங்களும், உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 4 ஆபாச இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளங்கள் பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விதிக்கும் விதமாகவும், ஆபாசத்தை பரப்பும் விதமாகவும் செயல்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி, ஒரு நபரை முழு அல்லது அரை நிர்வாணமாகவோ, அவர்களை பாலியல் நோக்கில் தவறாக சித்தரிப்பதோ சட்டவிரோதமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.