பொதுவாக, கருப்பையில் கருவை சுற்றி அம்னோடிக் திரவத்தால் சூழப்பட்ட ஒரு நீர் பை தான் பனிக்குடம். பிரசவ வலி ஏற்படும் போது இந்த பனிக்குடம் உடைந்து நீரை வெளியேற்றும். பிரசவம் நெருங்கும் போது, இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகள் விரிவடையும். அப்போது சவ்வுபோல் இருக்கும் இந்த பை கிழிந்து நீர் வெளியேறி, பிறகு குழந்தை வெளிவரும். ஆனால் ஒரு சிலருக்கு பிரசவ வலி இன்றி பிரசவ தேதிக்கு முன்னரே பனிக்குட நீர் உடைந்து விடும்.
அப்படி நடந்தால், அது அவசர மருத்துவ நிலையை குறிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு, பேறுகாலத்தில் 37வது வாரத்திற்கு பிறகு பிரசவ தேதிக்கு முன்னர் பனிக்குடம் உடைந்தால் அது PROM என்றழைக்கப்படுகிறது. இந்த PROM நிலை ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் குழந்தை பிறந்து விடும். ஆனால், 37வது வாரத்திற்கு முன்பு தண்ணீர் உடைந்தால் அது PPROM என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், தாயையும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிரையும் காப்பாற்ற உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
இந்த நிலை, ஒரு சிலருக்கு தான் வரும். இதற்க்கு காரணம், பனிக்குடத்தில் சூழ்ந்திருக்கும் அம்னோட்டிக் திரவம் அதிகப்படியாக இருக்கும் பட்சத்தில், குழந்தையின் எடையும் அதிகரிக்கும் போது, பனிக்குடம் உடைந்து விடுகிறது. சிறுநீர் பாதை நோய் தொற்று, கர்ப்ப காலத்தில் ஆபத்தை உண்டாக்கும். இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் போது அது பனிக்குடம் உடையும் அளவிற்கு தீவிரத்தன்மை அடைகிறது. சிறுநீர் பாதை நோய் தொற்று யோனியில் இருந்து கருப்பை வாய் வரை எல்லா வழிகளிலும் பயணித்து தொற்றை அதிகரிக்கும் போது அது முன்கூட்டியே பனிக்குட நீர் உடைவதற்கு காரணமாகிறது. மேலும், கடைசி மூன்று மாதங்களில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைப் பயணம், அதிக எடையை சுமக்கும் வேலையை செய்வது, அடிக்கடி குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது என அடிவயிற்றில் அழுத்தம் தரும் வேலையை செய்யும் போது பனிக்குடம் உடைந்து விடும்.
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால ஆபத்து பன்மடங்கு இருக்கும். அதனால் அதீத கவனமும் அவசியம். புகைபிடிக்கும் பழக்கம் உடைய தாய்மார்களுக்கு முன்கூட்டியே பனிக்குடம் உடையும் ஆபத்து அதிகம். கர்ப்பிணி 34 வார கர்ப்பமாக இருந்தால் பனிக்குட நீர் உடைந்த உடன், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் வெளியேற்ற மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
கர்ப்பிணி 24 முதல் 34 வாரங்களுக்குள் கர்ப்பமாக இருந்தால், கருவின் வளர்ச்சியை பொறுத்து பிரசவம் தேவைப்படுமா அல்லது மாற்று சிகிச்சை போதுமா என்பதை மருத்துவரே முடிவு செய்வார். குறிப்பாக 24 வாரங்களுக்கும் குறைவான கர்ப்பமாக இருக்கும் போது பனிக்குட நீர் உடைந்தால் மருத்துவர் பிரசவத்தை தாமதப்படுத்த சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்வார். குழந்தை அதிக நாட்கள் வயிற்றில் இருப்பது நல்லது, அதனால் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருப்பது நல்லது.
READ MORE: பெற்றோர்களே கவனம்!! தாயின் அஜாக்கிரதையால் துடிதுடித்து உயிரிழந்த பிஞ்சு குழந்தை..