அண்ணாமலை மீது வழக்கு தொடர் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததாக வெளியான செய்திக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதே போல சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரிய நிலையில், தற்போது அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என வெளியான செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகையின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.