துணிவு திரைப்படம் பார்க்க சென்று மாணவர் பலியான சம்பவத்தில் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படத்தை பார்க்க வந்த 19 வயதான பரத்குமார் என்ற அஜித் ரசிகர், ஓடும் லாரியின் மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்த போது படுகாயமடைந்தார். இதையடுத்து, கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பரத்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கல்லூரி மாணவரான பரத்குமார், பலியான விவகாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது இரு குழுவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆகிய இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கவன குறைவாக செயல்பட்டு பரத்குமார் பலியாவதற்கு காரணமாக இருந்த திரையரங்கு உரிமையாளர் மீது கவனக்குறைவாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்கிற இந்திய தண்டனைச் சட்டம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்வகுமார் என்பவர் இணைய வழியாக புகார் அளித்துள்ளார்.