முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மீது தாமாக முன் வந்து எடுத்த வழக்குகளை வரும் 27ஆம் தேதி முதல் விசாரிக்க உள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன. இதையடுத்து, கீழமை நீதிமன்றங்களை மேற்பார்வையிடும் மாஸ்டர் ஆப் ரோஸ்டராக இருந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை ஆராய்ந்து பார்த்தார்.
அந்த வழக்குகளில் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து அவர், மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டார். இதையடுத்து, அந்த வழக்குகளை தாமாக விசாரிக்க உள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதை எதிர்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 5ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார். தொடர்ந்து, இன்று அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் மட்டுமின்றி, தாம் முன் வந்து எடுத்த அனைத்து வழக்குகளையும் தன்னை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கிருப்பதாக கூறினார்.
மேலும், இந்த வழக்குகளில் உள்ளவர்கள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என்பதால், ஒவ்வொன்றையும் சிறப்பு வழக்காக விசாரிக்க பட்டியலிடப்படும் என்றார். மேலும், வழக்குகளின் விசாரணை வரும் 27ஆம் தேதி முதல் துவங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.