கர்நாடகா மாநில அரசைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும், காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை எனக்கூறி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 16ஆம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கர்நாடக மாநிலத்தில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
தன் கூட்டணியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று சொல்லி ஒரு கண்துடைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து தன் வழக்கமான தீர்மான நாடகத்தை திமுக திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறது.
கர்நாடகா அணைகளில் 80%-த்திற்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம் கண்டனத்துக்குரியது. ஆட்சியில் உள்ள மாநில அரசு, தண்ணீரைத் தர மறுக்கும், தன் கூட்டணிக் கட்சியைப்பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசைக் குறை கூறுவது, ஆளும் கட்சியின் திறமையின்மையைக் காட்டுகிறது.
காவிரி தண்ணீருக்காக கண்துடைப்பு கடையடைப்பு நடத்துவது திமுகவின் கபட நாடகம். டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஏமாற்றும் வேலை. பாஜகவின் சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக, கும்பகோணத்தில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.