Releases: போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஈடாக, இன்று 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உள்பட 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும் இஸ்ரேலை சேர்ந்த ஏராளமானோரை பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர். இதற்கு பதிலடியாக அக்டோபர் 8ம் தேதி முதல் ஹமாஸ் படையினரை குறி வைத்து இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் அப்பாவி பாலஸ்தீனர்கள் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – காசா போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவிகளை எடுத்து செல்லும் வாகனங்களையும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்கி வந்தது.
மேலும் காசாவில் பாலஸ்தீனர்கள் தங்க வைக்கப்பட்ட முகாம்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமலும், தங்க இடமின்றியும் பாலஸ்தீனர்கள் பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் படையினரை அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே கூறியிருந்தார். இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாவதும் தொடர்கதையாக நீடித்து வந்த நிலையில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடந்த 16ம் தேதி உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒத்து கொண்டது. அதேபோல் காசா மீதான போரை நிறுத்த இஸ்ரேலும் ஒப்பு கொண்டது. 3 கட்டங்களாக இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக ஹமாஸ் பிடித்து சென்ற 100 பணய கைதிகளில் 33 பணய கைதிகளை 6 வாரங்களில் விடுவிக்க ஹமாசும், இந்த 33 பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1,904 பாலஸ்தீனர் களை விடுவிக்க இஸ்ரேலும் ஒத்து கொண்டன.
இந்திய நேரப்படி நேற்று மதியம் 12 மணிக்கு(இஸ்ரேல் நேரப்படி காலை (8.30 மணி) போர் நிறுத்தம் அமலுக்கு வர இருந்தது. முதல்நாளான நேற்று ஹமாஸ் 3 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க, அதற்கு ஈடாக இஸ்ரேல் 90 பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, ஹமாஸ் அறிவித்தபடி 3 இஸ்ரேலிய பெண் பணய கைதிகள் நேற்று இரவு இந்திய நேரப்படி 8.55 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஈடாக இன்று அதிகாலையிலேயே 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.