மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களில் சுமார் 55 லட்சம் பேர் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். அதன் பிறகு அடிப்படை சம்பளத்தொகை உயர்வு மற்றும் 18 மாதங்களுக்கான நிலுவை அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புகளும் வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% வரை அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்தாண்டு (2023) மார்ச் மாதம் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படியானது 7ஆம் ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டும் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, 3% முதல் 4% வரை அகவிலைப்படி உயர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா காலகட்டத்தின் போது 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு புத்தாண்டுக்கு முன்பு அல்லது அதற்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளமானது வழங்கப்பட்டு வரும் நிலையில், 8-வது ஊதிய குழுவை உருவாக்குவது தொடர்பாக அரசு ஊழியர்களின் சங்கங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.