ஸ்மார்ட்போன் என்பது தற்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில், பயனர்கள் தங்களுக்கு தேவையான செயலிகளை ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே சில செயலிகள் (pre-installed apps) நிறுவப்பட்டிருக்கும்.. நாமே நினைத்தாலும், அந்த செயலிகளை அன் இன்ஸ்டால் செய்ய முடியாது.. இந்த சூழலில், இந்த செயலிகள் மூலம் உளவு பார்ப்பது மற்றும் செயலிகள் மூலம் பயனர் தரவை தவறாகப் பயன்படுத்துவது போன்ற சைபர் குற்றங்கள் நாட்டில் பரவலாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது…

இந்த நிலையில் மத்திய அரசு, ஸ்மார்ட்போன்களுக்கான புதிய பாதுகாப்புச் சட்டத்தை முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியானது.. அதன்படி, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.. அதாவது, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், முன் நிறுவப்பட்ட செயலிகளை (pre-installed apps) அகற்ற அனுமதி வழங்க வேண்டும்.. மேலும், இயக்க முறைமை (operating system updates) புதுப்பிப்புகளை திரையிடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறப்பட்டது.. புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “முன்-நிறுவப்பட்ட செயலிகள், பலவீனமான பாதுகாப்பு அம்சமாக இருக்கலாம், மேலும் சீனா உட்பட எந்த வெளிநாட்டு நாடுகளும் இதைப் பயன்படுத்துவதில்லை. இது தேசிய பாதுகாப்பின் விஷயம்” என்று தெரிவித்திருந்தார்…
இந்நிலையில் பத்திரிகை தகவல் பணியகமான PIB இந்த தகவலை மறுத்துள்ளது.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள PIB ” ஸ்மார்ட்போன்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகளை கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளது.. ஏற்கனவே நிறுவப்பட்ட செயலிகள் குறித்து வெளியான தகவல் தவறானது.. இதன் மூலம் மொபைல் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்த தற்போதைய ஆலோசனை தவறாக சித்தரிக்கப்படுகிறது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதே போல் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தச் செய்தி “தவறானது” என்று உறுதி செய்துள்ளார். மொபைல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் மீது மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொழில்துறைக்கு இடையே நடந்து வரும் ஆலோசனை செயல்முறையின் தவறான புரிதல் காரணமாக இந்த தகவல் வெளியாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்..