மத்திய நுகர்வோர் விவகாரத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் நான்கு மாநிலங்களில் 10 இடங்களுக்குச் சென்று, துவரம் பருப்பு, உளுந்து ஆகிய பருப்புவகைகளின் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறையின் செயலர் , அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த வாரம் அகில இந்திய பருப்பு ஆலைகள் சங்கத்தினருடன் செயலர் பேச்சு வார்த்தை நடத்தினார். 15-ம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்த அதிகாரிகளை துறை நியமித்தது.

அதன்படி, சென்னை, சேலம், மும்பை, அகோலா, லத்தூர், சோலாபூர், கலபுரக்கி, ஜபல்பூர், கத்னி ஆகிய பல்வேறு இடங்களுக்கு சென்று மாநில அரசின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். ஆலை உரிமையாளர்கள், வணிகர்கள், இறக்குமதியாளர்கள், துறைமுக அதிகாரிகள் ஆகியோருடனும் இந்த ஆலோசனை நடைபெற்றது. பருப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அவற்றின் இருப்பை வெளியிடுவது அவசியமாகும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தங்களிடம் உள்ள இருப்பை மறைக்காமல் அறிவிக்க வேண்டும் என்றும் தவறுவோர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.