இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2012 வரை பிற மதங்களில் இருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்கள் ஏற்கனவே பெற்ற சாதி சான்றிதழ் மாற்றப்பட்டு, முஸ்லிம் ராவுத்தர் அல்லது லப்பை என்ற புதிய சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன்வழியே, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிமை அளிக்கப்பட்டது. ஆனால், 2012-க்கு பிறகு மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை.
எனவே, முஸ்லிமாக மதம் மாறிய, பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவர்களை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினராகக் கருதி, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியபடியே வந்தன. இதனை அரசும் ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ”இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த முஸ்லிம்களாக கருத உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5 % இடஒதுக்கீடு பெறும் வகையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பிசிஎம் என சாதி சான்றிதழ் வழங்கும் போது உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Ration | ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! இனி உங்கள் கையில் இருக்கும் ஃபோனிலும் பார்க்கலாம்..!!