Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி, நியூசிலாந்தை 44 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. துபாயில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதின. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதியில் நுழைந்துவிட்டன. இந்தநிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணி துவக்கத்தில் திணறியது. மாட் ஹென்றி ‘வேகத்தில்’ சுப்மன் கில் (2) எல்.பி.டபிள்யு., ஆனார். ஜேமிசன் பந்தில் கேப்டன் ரோகித் சர்மா (15) அவுட்டானார். கோலியும் (11) விரைவில் வெளியேற, இந்தியா 7 ஓவரில் 30/3 ரன் எடுத்து தவித்தது. பின் ஸ்ரேயாஸ், அக்சர் படேல் சேர்ந்து விவேகமாக ஆடினர். நான்காவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த நிலையில், ரச்சின் ரவிந்திரா வலையில் அக்சர் (42) சிக்கினார். ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் 2 சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ், 79 ரன்னுக்கு ரூர்கே பந்தில் அவுட்டானார். சான்ட்னர் ‘சுழலில்’ ராகுல் (23) அவுட்டாக, இந்தியா 39.1 ஓவரில் 182/6 ரன் தான் எடுத்தது.
கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ரன் சேர்த்தார். ஜடேஜா, 16 ரன் எடுத்தார். ஜேமிசன் ஓவரில் (49வது) பாண்ட்யா வரிசையாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். ஹென்றி பந்தில் பாண்ட்யா (45), அவுட்டானார். இதே ஓவரில் ஷமியை (5) வெளியேற்றிய ஹென்றி, தனது 5வது விக்கெட்டை பெற்றார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு பாண்ட்யா ‘செக்’ வைத்தார். இவரது பந்தை துாக்கி அடித்த ரச்சின் ரவிந்திரா (6), அக்சர் படேலின் அசத்தல் ‘கேட்ச்சில்’ அவுட்டானார். பின் இந்தியாவின் நான்கு ‘ஸ்பின்னர்’ பார்முலா வெற்றிக்கு கைகொடுத்தது. வருண் ‘சுழலில்’ வில் யங் (22) போல்டானார். டேரில் மிட்சல் 17 ரன்னுக்கு வெளியேற, 26 ஓவரில் 104/3 ரன் எடுத்தது.
வில்லியம்சன், லதாம் சிறிது நேரம் போராடினர். ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அனுபவ வில்லியம்சன், 77 பந்தில் ஒருநாள் அரங்கில் 47வது அரைசதம் எட்டினார். ஜடேஜா பந்தில் லதாம் (14) அவுட்டானார். வருண் வலையில் கிளன் பிலிப்ஸ் (12), பிரேஸ்வெல் (2) நடையை கட்டினர். அக்சர் படேல் பந்தில் வில்லியம்சன் (81) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஹென்றியை (2) வெளியேற்றிய வருண், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நியூசிலாந்து அணி 45.3 ஓவரில் 205 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. லீக் சுற்றில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்தியா, ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்தது. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 2 முறை மோதின. இதில் நியூசிலாந்து (2000, நைரோபி), இந்தியா (2025, துபாய்) தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. சுழலில் அசத்திய வருண் சக்ரவர்த்தி (5 விக்கெட், 42 ரன், 10 ஓவர்) சாம்பியன்ஸ் டிராபியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 36 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், லண்டன், 2013) உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் அறிமுகமான முதல் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2வது பவுலரானார் வருண். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (6/52, எதிர்: நியூசிலாந்து, 2017) உள்ளார்.
Readmore: மத்திய அரசை கண்டித்து இன்று முதல் தொகுதி தோறும்…! துணை முதல்வர் உதயநிதி அதிரடி அறிவிப்பு