தமிழ்நாட்டில் எதிர்வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 8:30 மணி அளவில் மத்திய கிழக்கு தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிரம்பிய தீவிர புயல் சின்னமான பிபர்ஜாய் வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு வட மேற்கு திசையில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் மும்பையிலிருந்து, மேற்கு தென்மேற்கு சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத் மாநிலம் போர் பந்தரில் இருந்து தெற்கு தென்மேற்கு சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கிறது.
இனிமேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு, வடகிழக்கு திசையிலும் அதன் பின்னர் அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு, வட மேற்கு திசையிலும் நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மற்றும் வெப்ப சலனம் ஏற்பட்டு இருப்பதால் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரையில் தமிழகம் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல இன்று தமிழக மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம். ஒரு சில பகுதிகளில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.