நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்ந்தது. பின்னர், புவியின் சுற்றுவட்டப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் – 3 நுழைந்தது. இதற்கிடையே, நேற்றைய முன்தினம் புரபல்சன் பகுதியில் இருக்கும் விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படத்தை 2-வது முறையாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதேபோல், நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. லேண்டரின் உயரம் குறைந்தபட்சமாக 113 கிலோமீட்டரும் அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நாளை மதியம் 2 மணியளவில் இரண்டாவது முறையாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்படி படிப்படியாக லேண்டரின் தூரம் குறைக்கப்பட்டு, ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சந்திரயான் – 3 விண்கலம் மற்றும் ரஷ்யாவின் லுனா 25 விண்கலம் இரண்டுமே தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. தற்போது, இவை இரண்டும் எவ்வளவு தூரத்தில் தரையிறங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், தென் துருவத்தில் இரு விண்கலமும் தரையிறங்கினாலும் இரண்டுமே வெவ்வேறு பகுதிகளில் தான் இறங்க உள்ளது. சந்திரயான் – 3 விண்கலம் தெற்கு அட்சரேகையில் 68 டிகிரி கோணத்திலும், ரஷ்யாவின் லுனா 25 விண்கலம் 70 டிகிரி அட்சரேகையிலும் இறங்க உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே தொலைவு மட்டும் பலநூறு கிலோ மீட்டர்களை தாண்டும். எனவே, ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கும்” என்றனர்.