இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால் கடலுக்குச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகளும், சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் முடிவடைந்துள்ளன. சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3எம்4 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் தொடங்கியது.
அதன்படி, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் சந்திராயன் 3 விண்கலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் இன்று ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று சென்னை பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மூலம் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையடுத்து, பழவேற்காடு பகுதி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3 வானில் ஒரு மாத பயணத்திற்கு பின் ஆகஸ்ட் மாதத்தில் நிலவை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும். இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.