பொதுக்குழுவில் அதிமுகவின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 22ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மார்ச் 28ஆம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பட்டன. மேலும், பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக-வின் பொதுச் செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டது. மேலும் அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், பொதுக்குழுவில் அதிமுகவின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.