18வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை சனிக்கிழமையன்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, யுபிஎஸ்சி தேர்வு கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மே 26, 2024 இல் திட்டமிடப்பட்டிருந்த சிவில் சர்வீசஸ் தேர்வு தேதியை மாற்றியமைத்துள்ளது. பிரிலிம்ஸ் தேர்வு ஜூன் 16ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக, ஆணையம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் (சிஎஸ்இ) 2024 க்கான பதிவு காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 6 (மாலை 6 மணி) வரை நீட்டிக்கப்பட்டது. திருத்தச் செய்ய மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தேர்தல் தேதி
மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது. 94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
96 தொகுதிகளுக்கு 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.