ரூ.2000-க்கு மேல் பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.2000-க்கு மேலான பரிவர்த்தனைக்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. ஆனால், உண்மையில் இந்த கட்டணத்தை வணிகர்களே செலுத்துவார்கள், வாடிக்கையாளர்கள் செலுத்தமாட்டார்கள். இருப்பினும் வணிகர்கள் இந்தக் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். யுபிஐ (UPI) மூலம் பொதுவான பரிவர்த்தனைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்களுக்குப் பொருந்தக்கூடிய பரிமாற்றக் கட்டணத்தின் மீதான என்பிசிஐ முன்மொழிவுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா? என்று மக்கள் மத்தியில் யோசனை எழுந்தது. இந்நிலையில், தற்போது என்பிசிஐ எந்தவொரு வாடிக்கையாளரும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த முன்மொழிவு பிபிஐ-க்கு மட்டுமே பொருந்தும், அதாவது வங்கிக் கணக்குகளை இணைப்பது ஆகும்.
வங்கிக் கணக்குகள் இணைப்பு என்பது யுபிஐ பரிவர்த்தனைகளில் நடக்கும் பொதுவான ஒன்று தான். கிட்டத்தட்ட 99.9% வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை தான் நடக்கிறது. ஆனாலும், இந்த முன்மொழிவின் முக்கிய நோக்கம் மீதமுள்ள 0.1% பரிவர்த்தனைகளை வங்கியுடன் இணைப்பது தான். சுருக்கமாக சொன்னால், வணிகர்கள் வாலட் நிறுவனத்திற்கு 1.1% கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஏனெனில் இது ப்ரீபெய்டு கருவியாகும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.