சமீப காலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள், போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. குறிப்பாக, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நிறைவாக அமல்படுத்தப்படும் இடங்களில் கூட, எதிர்பாராத வகையில் திருட்டு, வழிப்பறி, கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவது கவலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடந்த லாரி கடத்தல் சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமானப் பொருட்களுடன் செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற லாரி, பரனூர் சுங்கச்சாவடியில் Fastag கணக்கில் பணம் இல்லாததால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஓட்டுநர் கமலக்கண்ணன் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு பணம் வருவதை காத்திருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென லாரியை கடத்திச் சென்று விட்டார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு, சினிமா பாணியில் போலீசார் இருசக்கர வாகனங்களில் துரத்தினர்.
மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் போலீசார் பல தடுப்புகளை அமைத்தும் அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் வேகமாக. இறுதியாக, மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே போலீசர் பாலமுருகன் தனது உயிரைப் பணையம் வைத்து லாரியின் முன்பக்கம் ஏறி, ஓட்டுனரை கட்டுப்படுத்த முயற்சித்தார். கடைசியாக லாரி தடுப்பில் மோதி நின்றது. அதன்பின்னர், போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைதான நபர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று சுற்றித் திரிந்துள்ளார் என்றும், நேற்று அங்கு உள்ள கோவிலில் நுழைந்து கட்டுமானப் பொருட்களை சூறையாடியதாகவும், சுங்கச்சாவடி அருகே பெண்களிடம் வழிப்பறி செய்ய முயற்சித்ததாகவும் தகவல் கூறப்படுகிரது.
சுபாஷ் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் ஒன்றில் வைத்து போலீசாரால் தீவிரமாக விசாரணை செய்யப்படுகிறார். அவர் தொடர்ந்து மனநல பாதிப்புடன் பேசி வருவதால், அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையில், லாரியில் இருந்த ஜல்லிக்கற்கள் மாற்று லாரிக்கு ஏற்றும் பணி நடைபெறுவதால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2-3 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.