அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், செந்தில் பாலாஜிக்கு எதிராக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அவர் சில முறைகேடுகளை செய்ததாகவும், தற்போது மின்சாரத்துறை அமைச்சராக அவர் சில குற்றங்களையும், மோசடிகளை செய்துள்ளதாகவும் சவுக்கு சங்கர் தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக சில வீடியோக்களில் சவுக்கு சங்கர் பேசி இருந்தார். அமைச்சர் முறைகேடுகளை செய்து இருக்கிறார். அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை செல்வார். அவர் ஊழல் செய்துள்ளார் என்று புகார்களை அடுக்கி சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டு இருந்தார். வேறு ஊடகங்களில் அவர் அளித்த பேட்டியிலும் இதே குற்றச்சாட்டை வைத்தார்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக சமீபத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார். சவுக்கு சங்கர் தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதோடு அவர் தனக்கு எதிராக பேசிய வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார். சவுக்கு சங்கர் இதனால் எனக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீது ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு செய்ய கூடாது என்று சவுக்கு சங்கருக்கு ஆணையிடப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது.
அவருக்கு எதிராக வெளியிட்ட அவதூறுகளை நீக்க வேண்டும். சமூக வலைதள போஸ்டுகளை நீக்க வேண்டும். வீடியோக்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடைக்கால தடை விதித்துள்ளார்.
இதற்கிடையே, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி குறித்து கடந்த சில நாட்களாக சவுக்கு சங்கர் போஸ்ட் செய்து வந்தார். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இனி ட்வீட் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.