பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து பணம், நகை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த பாஜக பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த சேலையூர் செம்பாக்கம், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் லியாஸ் தமிழரசன் (24). இவர், சட்டப்படிப்பு படித்து வரும் நிலையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர், அப்பெண்ணை லியாஸ் தமிழரசன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி கார், ஐபோன், ஐவாட்ச், நகை, பணம் என சிறுக சிறுக சுமார் ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 20 சவரன் நகைகளை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இப்படி பல இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, திருமணத்திற்கு தமிழரசன் மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி, இருவரும் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில், அந்த பெண் லியாஸ் தமிழரசனின் இன்ஸ்டா ஐடியை சோதனை செய்து பார்த்தபோது, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி பணம் மற்றும் நகைகளை பெற்றுள்ளார். பல பெண்களுடன் லியாஸ் உல்லாசமாக இருப்பதை அவர்களுக்கே தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்தும் வைத்திருந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பெண் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரை அடுத்து, விசாரணை நடத்திய போலீசார் தமிழரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல், தமிழரசனால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணும் போலீசில் புகாரளித்துள்ளார். இதனால், அவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்களும் அடுத்தடுத்து புகாரளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.