சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்த வெள்ளாளபுரம் சன்னியாசி கடை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). இவர், லாரி பட்டறை உரிமையாளர். இவரது மனைவி சத்யா (26). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வீட்டிற்கு செல்வார். மற்ற நாட்களில் வேலை காரணமாக பட்டறையிலேயே தங்கி விடுவார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் கருங்கல்காடு பகுதியில் ரமேஷ், கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ரமேஷ்வுடன் பணியாற்றி வந்த ஊழியர் சசிகுமார் கொலை செய்தது தெரியவந்தது. அதாவது, சசிகுமாரின் தாய்க்கும், ரமேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை கைவிடுமாறு பலமுறை சசிகுமார் எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரமேஷை சசிகுமார் கத்தியால் குத்திக்கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக சசிகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.