தமிழகத்தில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப்புகளாலும் தன் வடிவத்தை இழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இயற்கை பேரிடர்களால் நாட்டின் கடற்கரை பகுதிகள் அழிந்து வருகின்றன. இந்தநிலையில், சென்னையில் உள்ள தேசியகடற்பகுதி ஆராய்ச்சி மையம் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், செயற்கைக் கோள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் கடற்கரை பகுதிகளை கண்காணித்து வருகிறது. இந்தியாவின் 6,907 கி.மீ. நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்கரை பகுதியிலும் கடந்த 1990 முதல் 2018 வரையிலான 28 ஆண்டுகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்புக்கும், மனிதர்களால் ஏற்படும் அழிவுக்கும் இலக்காகி 34சதவீத கடற்கரை பகுதி தனதுமுந்தைய வடிவத்தை இழந்துள்ளது. 27 சதவீத இயற்கையான மாற்றங்களால் தனது வடிவத்தை இழந்திருக்கிறது. இவ்வாறு 61 சதவீத கடற்கரை பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. 6,907 கி.மீ. நீளம் உள்ள கடற்கரை பகுதியில் 39 சதவீதம், அதாவது 2,700 கி.மீ. நீள கடற்பகுதி மட்டுமே வடிவம் மாறாமல், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாமல் உள்ளதாகவும்
தமிழகத்தில் மொத்தம் 991 கி.மீ. நீளமுள்ள கடற்கரை பகுதியில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களுக்கு இலக்காகிறது. அதன் வடிவமும் மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.சென்னை, 25km நீளமான கடற்கரையுடன், கிட்டத்தட்ட 10km வரை பெருகியுள்ளது. இதில் மெரினா கடற்கரையும் அடங்கும். சென்னை துறைமுகம் இருப்பதால் துறைமுகத்திற்கு தெற்கே பெருகி, வடக்கு நோக்கி அரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் அடையாறு, கூவம் ஆகிய இரண்டும் தடைபட்டுள்ளதால் கடலுடன் நீர் பரிமாற்றம் இல்லை. இதனால் கழிமுகத்தில் மாசுகள் தேங்கி நிற்கிறது.
84 கிமீ கடற்கரையில் 52 கிமீ அரிப்பை எதிர்கொண்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்றாவது மாவட்டமாகும். காஞ்சிபுரத்தில் கடற்கரை வளர்ச்சி பணிகளின்போது ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகளே அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்றும் இவை அனைத்தும் கடலுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. 272கிமீ கொண்ட ராமநாதபுரம் கடற்கரையில் 109கிமீ அளவுக்கு அரிப்பு ஏற்பட்டு மிக மோசமாக உள்ளதாகவும், நாகப்பட்டினம் 126 கிமீ கடற்கரையில் 60 கிமீ அரிப்பை எதிர்கொள்கிறது என்றும் தெரியவந்துள்ளது. சோதனை முயற்சியாக, புதுச்சேரியில் 2 இடங்களில் அறிவியல்பூர்வமான சில நடவடிக்கைகளை புவி அறிவியல் அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் கடற்பகுதியில் இழந்த நிலப்பரப்பை மீட்கமுடியும் என்று கருதப்படுகிறது.