சென்னை மாநகர பேருந்துகளில் தினசரி பயணம் செய்வோரின் எண்ணிக்கை 31 லட்சமாக அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் சேவை, ஆட்டோ ஆகியவை முக்கிய அங்கம் வகிக்கிறது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாநகர பேருந்துகளில் தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்தனர். கொரோனா தொற்றால் பயணிகள் எண்ணிக்கை பல லட்சம் குறைந்தது. ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளால் பேருந்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்தது. மேலும், ஊரடங்கின் போது பலர் இருசக்கர வாகனத்துக்கு மாறினர்.
இயல்பு நிலை திரும்பிய பிறகு பேருந்துகள் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும், பழைய நிலையை எட்டவில்லை. பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள், முழுமையாக செயல்பட தொடங்கிய பிறகும் கூட 27 லட்சம் பேர் வரை மட்டுமே பயணம் செய்தனர். கடந்த மாதம் வரை இதே நிலை நீடித்தது. ஆனால், மாநகர பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. தற்போது 31 லட்சம் பேர் வரை பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு முந்தைய நிலையை தற்போது தான் எட்டி வருகிறது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. 10½ லட்சம் பெண்கள் மட்டும் இலவசமாக பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தில் 8 முதல் 9 லட்சமாக இருந்தது. தற்போது பெண்கள் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். 1,559 சாதாரண பேருந்துகளில் பெண்கள் தினமும் இலவசமாக பயணிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.