சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5000 வரை வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடப்பாண்டுக்கான சொத்து வரியை செலுத்தியவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஊக்கத்தொகை வழங்கியது. அதாவது 15 நாட்களில் மட்டும் ரூ.275 கோடிக்கு அதிகமாக வரி வசூலாக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 15ஆம் தேதி வரை 4,89,790 உரிமையாளர்கள் வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்று பயனடைந்துள்ளனர். இந்த 15 நாட்களில் 290 கோடி ரூபாய் வரை வசூல் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்த முடியாதவர்கள் தங்களுக்கு ஊக்கத்தொகை இனிமேல் கிடைக்காது என கலக்கத்தில் இருந்து வந்தவர்களுக்கு தற்போது மாநகராட்சி மீண்டும் ஊக்கத்தொகை சலுகையை அறிவித்துள்ளது.
அந்த வகையில், வரும் 30ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் உரிமையாளர்கள் சொத்து வரியை தங்கள் இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பவர்களிடம் சொத்து வரியை செலுத்தலாம் எனவும் மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள இ- சேவை மையங்களில் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.