சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சீமான் கடந்த 10ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், சீமான் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் சீமான் ஆஜராகவில்லை.
இதை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது முறையாக போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சூழலில் யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை திரும்ப பெற்று பெங்களூரு திரும்பினார். நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் விளக்கமளித்தனர். விஜயலட்சுமி அளித்த புகார் மனு இன்னும் முடித்து வைக்கப்படாத நிலையில், கடந்த 18ஆம் தேதி சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரானார்.
இதையடுத்து நடிகை விஜயலட்சுமி புகாரில் 2011ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விஜயலட்சுமியை வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.