கேண்டீனில்டீ குடிக்க சென்ற சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலும் விளக்கம் கொடுத்தார். அதன் பின்னர் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் வடமாநில மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இந்த இரு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐஐடி மாணவி ஒருவர், கேண்டீனில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியிடம் கேண்டீனில் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதன்பின் ஐஐடி மாணவி நேரடியாக புகார் அளித்துள்ளார். இதன்பின் கேண்டீனில் பணியாற்றிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராமை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஐடி கேண்டீனிலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.