சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில், ரயிலில் பயணம் செய்யாமல் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், வாகனங்களை எத்தனை மணிநேரம் நிறுத்திவைக்கிறோம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பல மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்களும் கூட வாகனங்களை நிறுத்துகின்றனர். குறிப்பாக, பரங்கிமலை, கிண்டி, திரிசூலம் பகுதிகளிலிருந்து மின்சார ரயில்களில் செல்பவர்கள், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களை பயன்படுத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ரயிலில் பயணம் செய்யாமல் வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்துவோருக்கான கட்டணம் நாளை மறுதினம் முதல் உயர்த்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 6 மணிநேரம் வரை வாகனங்களை நிறுத்துவோருக்கு 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 6 மணிநேரம் முதல் 12 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு 15 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், 12 மணிநேரத்துக்கு மேல் நிறுத்துவதற்கு 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர கட்டணமாக 6 மணிநேரத்துக்கு 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும், 12 மணிநேரத்துக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அட்டை வைத்திருப்போருக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.