மும்பைக்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் தான் எனக்கு பிடித்த மைதானம் என்று ட்விட்டரில் ரசிகரின் கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பதிலளித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. அதைக்காண ரசிகர்கள் கூட்டம் அரங்கம் நிறைந்திருந்தது. இந்தநிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் #AskSachin என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு அதன்கீழ் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்தார்.
அதில், இப்போது ட்விட்டரில் ப்ளூ டிக்கை நீக்கி விட்டார்கள். நீங்கள்தான் சச்சின் என்று எப்படி நாங்கள் நம்புவது என்று ஒருவர் கேட்க, இப்போதைக்கு இதுதான் எனது ட்விட்டர் ப்ளூ டிக் என்று, செல்ஃபி ஒன்றை சச்சின் வெளியிட்டுள்ளார். அசோக் ராகவன் என்பவர் மும்பை வான்கடே மைதானத்திற்கு அடுத்தபடியாக உங்களுக்கு இந்தியாவில் எந்த மைதானம் பிடிக்கும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சென்னை சேப்பாக்கம் என தமிழில் சச்சின் டெண்டுல்கர் பதில் அளித்தார். இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
தோனியைப் பற்றி ஒருவார்த்தை சொல்லுங்களேன் என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு எம்.எஸ். என்றுதான் நான் தோனியை எப்போதும் அழைப்பதாக கூறியுள்ளார் சச்சின். தற்போது தோனியின் ஹோம் கிரவுண்டாக திகழும் மைதானங்கள், கடந்த காலங்களில், சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் எந்த மைதானத்திற்கு சென்றாலும் அது அவருடைய ஹோம் கிரவுண்ட் போல ரசிகர்களின் சப்போர்ட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.