முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இருவரும், ஒரே நேரத்தில் தயாளு அம்மாளை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் இன்று தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கோபாலபுரம் வீடு அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை முதலே உறவினர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தயாளு அம்மாளின் மகன் முக.தமிழரசன், பேரன் அருள்நிதி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவரின் குடும்பத்தினர், தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி, இன்று பிறந்தநாள் கொண்டாடும் முரசொலி செல்வம் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தி ஆசி பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்தில், தயாளு அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி, ஆசி பெறுவதற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வந்துள்ளார். அப்போது அவரது சகோதரர் மு.க.அழகிரியும் தனது மனைவி மகனுடன் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அப்போது ஒருவரை ஒருவர் வரவேற்றுக்கொண்டதோடு, நீண்டநேரம் அமர்ந்து உரையாடியதாக கூறப்படுகிறது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற விழா, உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா ஆகியவற்றிற்கு மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். மதுரைக்கு சென்றபோது அழகிரியின் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். மேலும், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இருவரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். ஆனால் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இருவரும் நேரில் சந்தித்து கொள்ளவே இல்லை. இந்நிலையில், இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.